இன்று காலை வெளியான வெடி: திரும்பப் பெற்றது மேல் நாட்டம் நடுவில் குறைந்து கொள்ளும் (4) இதற்கான விடை: மீட்டது விடைக்கான விளக்கத்தை ஆர்வமுள்ளவர்கள் கருத்துரையாக இடலாம். தமிழில் "ள்" என்ற எழுத்தில் முடியும் வினைச் சொற்கள் எளிதில் புலப்படாதவிதமாய் மாற்றமடைகின்றன. நீள், வறள், புறள் என்பவை நீண்டு, வறண்டு, புரண்டு என்று என்றும், பெயர்ச்சொல்லாகும்போது நீட்சி, வறட்சி, புரட்சி என்றும் உருமாறுகின்றன. ஏற்கனெவே தோசையைப் புரட்சியால் (புரளவைத்து) விளைந்த தின்பண்டம் என்று புதிரமைத்திருக்கிறேன். இன்றைய வெடிக்கு வேரான வினைச்சொல் "மீள்". அது மீண்டு, மீட்டு (தன்வினை, பிறவினை) என்று இறந்தகால எச்சமாக வரும். மீட்சி என்ற சொல்லை பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் அழகாகக் கையாண்டுள்ளார்கள். ("மீட்பர் ஏசு"). மீட்டு என்பது வினையாக வீணையின் கம்பிகளில் விரலால் அதிரவைப்பதைக் குறிக்கும். என்றாவது அதை வைத்தும் உங்களை மீளாத் தொல்லையில் ஆழ்த்தும்படி ஒரு புதிர் செய்துவிட வேண்டும்.