இன்று (24 ஜூலை 2018) வெளியான வெடி: மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5) இதற்கான விடை: தூக்கணம் = தூக்க + ணம். இலைங்கைத் தமிழில் தொங்கட்டான் (கம்மல்?). காதோடு ஒட்டியிருக்காமல் தொங்கிக் கொண்டிருக்கும் வகையான காதணி. தமிழ்நாட்டில் தூக்கணம் என்று ஒரு குருவி வகையையே குறிப்பிடுகிறோம். (இது தவறாக இருந்தால் சொல்லுங்கள்). மற்ற பறவைகள் தங்கள் கூட்டினை மரக் கிளைமேல் அமைத்துக் கட்டும். ஆனால் இக்குருவியோ மரத்திலிருந்து தொங்குமாறு கட்டும். அதனால்தானோ இலங்கையில் தொங்கும் காதணியைத் தூக்கணம் என்றழைக்கிறார்கள் போலும்! தூக்கணங் குருவி கூடு கட்டுவதைப் புனே நகரில் ஒருவர் காணொளியாய் வெளியிட்டுள்ளது இதோ: சிறுவயத்தில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் குரங்கு பறவைக் கூட்டைச் சிதைத்த கதை வந்திருக்கும். அது தூக்கணங் குருவிதான். விவேக சிந்தாமணியில் இடம்பெற்ற உவமை: வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே தூக்கணங்குருவியைச் சொல்லும் தெலுங்குக் குயில் இங்கே: ...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.