இன்று காலை வெளியான வெடி:
உடலில் இருப்பது நாளைய மலர் சூடிய கிழங்குத் துண்டு (4)
அதற்கான விடை: முழங்கை = முகை + (கி) ழங் (கு)
முகை = அரும்பு
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
**************************
நேற்றைய திருப்பாவை பாடலின் எதிரொலியோ, இன்றைய புதிரில் ஒலித்தது! ?
நேற்று முழங்கை வரை நெய் வழிய அனைவரும் கூடி அருந்தி உள்ளம் குளிர்ந்தோம் !
அருமையான புதிர் அமைத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் 💐
அக்காரவடிசில் அருந்திய திருப்தி! !🙌
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருப்பாவை
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
*****************
உடலில் இருப்பது நாளைய மலர் சூடிய கிழங்குத் துண்டு (4)
நாளைய மலர்
= இன்றைய மொட்டு
= முகை
கிழங்குத் துண்டு
= [கி]ழங்[கு] = ழங்
நாளைய மலர் சூடிய
= முகை உள்ளே ழங்
= முழங்கை
உடலில் இருப்பது
= முழங்கை
******************
பொதுவாக மாலை 7 - 9 மணி இடைவேளையில் எப்போதாவது விடைக்கான பதிவை எழுதிவிட்டு 9 மணிக்கு வெடிக்கும்படி டைம்பாம்ப் வைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். நேற்றிரவு மிகுந்த அசதியோடு செய்ததால் கைவெடிகுண்டாக வீசிவிட்டேன். மன்னிக்கவும்.
@ராகவன்: ஆமாம். முந்தாநாள் அத்திருப்பாவைப் பாடலைப் படிக்கும்படி நேரிட்டது. அதிலிருந்து சுட்டுவிட்டேன். தேனெடுத்தவன் புறங்கை நக்காமல் இருக்க முடியுமா? நான் முழங்கை வரை சென்றுவிட்டேன்.