Skip to main content

விடை 3918

இன்றைய வெடி:
முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)
அதற்கான விடை:  சுரும்பு = வண்டு, முரலும் (அதாவது, ரீங்காரமிடும்) குணம் கொண்ட உயிரி.

சுரும்பு = ரும்பு  + சு
ரும்பு = அரும்பு(மொட்டு) ‍- அ
சு = சுகந்தம் தொடக்கம்

சுரும்பு என்றால் வண்டு என்று எப்போதோ சங்கப்பாடல் குறித்த புத்தகத்தில் படித்திருக்கிறேன்.   இன்று புதிரை வெளியிட்டபின் தேடியதில் இணையத்தின் மூலம் கிடைத்த இரண்டு  இலக்கிய உதாரணங்கள்
"சுரும்பு உணக் கிடந்த நறும் பூ" ‍‍‍  சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணம் முடிந்த பின் வருகிறது.  வண்டு (தேனை) உண்ணுவதற்கு வந்து கிடந்த நறும்பூ என்று இதன் பொருள்.
அகநானூற்றுப் பாடலொன்றில்
" சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்"


கிராமங்களிலோ, இலங்கையிலோ சுரும்பு என்ற சொல் புழக்கத்திலுள்ளதா? தெரியவில்லை.

இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
************************
_முனை கிள்ளிய மொட்டுக்கு சுகந்தமான தொடக்கத்தால் வந்து முரலுவது (4)_

_முரலுவது_
= *வண்டு*
(முரலுதல் வண்டின் இமிழும் ஒசை.)

_மொட்டு_ = *அரும்பு*
_முனை கிள்ளிய மொட்டு_
= *ரும்பு*

_சுகந்தமான தொடக்கத்தால் வந்து_
= *சு* (கந்தமான)+ *ரும்பு*
= *சுரும்பு* (வண்டு)
= _முரலுவது_
************************* 
*அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுரும்பு*
பொருள்
*வண்டு* – ஆண்வண்டு
மலை
*_வாக்கிய பயன்பாடு_*
பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; *சுரும்பு* ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.

*இலக்கிய பயன்பாடு*
பாடல்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

_மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்_
_*சுரும்பும்* மூசாச் சுடர்ப்பூங் காந்தள்_
_பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்_

*கருத்து உரை*
மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் 
ஏறுவதற்கு கடினமான வகையில் 
மிக உயரமாக வளர்ந்து 
நிற்கும் மரங்களையுடைய 
மலைப்பக்கத்தில், 
*வண்டு* களாலும் மொய்க்க இயலாத 
அதிக உயரத்தில்  சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற 
நிறமுடைய செங்காந்தள் 
மலர்களால்  ஆன குளிர்ச்சி பொருந்திய பெரிய‘கண்ணி‘யைத் தலையில் அணிந்த  திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.
************************
💐🙏🏼
Unknown said…
அபிராமி அந்தாதி: பாடல் 94
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழி தடுமாரி முன் சொன்னதெல்லலாம்
தரும் பித்தர் ஆவதென்றால் அபிராமி சம்யம் நன்றே

வண்டைப் போல் களித்து சொல்லும் தடுமாறி
Sundar said…
சுரும்பு (குறிப்பாக இலங்கையில்) Drone என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது!
Vanchinathan said…
இவ்வெடிப் பக்கங்களுக்கு ஒரு இலங்கைத் தமிழர் முன்பு வந்திருக்கிறார். அவரால் இதைப் பற்றிச் சரியான தகவலை அளிக்க முடியும். வேலை மிகுதியால் வருவதில்லை போலும்.
Unknown said…
நான் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் drones புழக்கத்தில் இருந்தது இல்லை. அத்தோடு சுரும்பு என்ற சொல் drone ஐ குறிக்க இப்போது பாவிக்கப்படுவதாக நான் அறியவில்லை. ஆனால் சுரும்பு என்ற சொல் தேவாரங்களில் வருவதால் சைவசமயம் ( வகுப்பு 1 முதல் 11 வரை சமயம் கட்டாயபாடம்) படித்தவர்களுக்குச் சாதாரணமாகத் தெரிந்திருக்கும் ஒரு சொல். குறிப்பாக “தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார் மலர் இண்டை கட்டி” என்ற தேவராம் எட்டாம்/ஒன்பதாம் வகுப்புகளில் சொல்லித்தரப் பட்டது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.