Skip to main content

சாய் சதுரங்கள் 1


சாய் சதுரம் (rhombus) என்பது சதுரத்தைப் போல் நான்கு பக்க அளவுகளும் சமமாக இருக்கும் நாற்கர வடிவம். ஆனால், அதன் நான்கு கோணங்களும் செங்கோணங்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.
சாய் சதுரத்தில் மூலை விட்டங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்கோண இருசம வெட்டிகளாக அமையும் (diagonals are perpendicular bisectors of each other).
இப்பண்பை அடிப்படையாகக் கொண்டு மூலை விட்டம் ஒன்றின் அளவை மாற்றாமல் பல சாய் சதுரங்களை அமைக்கலாம். இதோ அதற்கான வழிமுறை.
ஒரு செவ்வகத்தை எடுத்துக் கொண்டு அதன் நான்கு பக்கங்களிலும் நடுப்புள்ளிகளைக் குறித்துக் கொள்வோம். அந்த நடுப் புள்ளிகளை வரிசையாக இணைத்தால் அக்கோடுகள் அனைத்தும் ஒத்த அளவாய் அமைந்து நாம் ஒரு சாய் சதுரத்தைப் பெறுவோம்.
செவ்வகத்தின் அகலம் b என்றும், உயரம் a என்றும் கொண்டால் இந்த நடுப்புள்ளிகளின் மூலம் அமைக்கப்பட்ட நான்கு கோடுகளும் a/2, மற்றும் b/2 அளவுகள் கொண்ட செங்கோண முக்கோணத்தின் கர்ண அளவுடையதாய் இருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாற்கரத்தில் பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் நான்கு பக்கங்களும் $\sqrt{ (a/2)^2 + (b/2)^2}$ நீளத்துடன் அமைந்து சாய் சதுரமாக இருக்கும். இந்த சாய் சதுரத்தின் ஒரு மூலை விட்டம் a அளவுடையதாயும் மற்றது b அளவுடையதாயும் இருக்கும்.
இப்போது சூழ்ந்த செவ்வகத்தை சாய் சதுரத்தின் இரண்டு மூலை விட்டங்களும் நான்கு சம துண்டுகளாக (அவையும் செவ்வகங்களே) பிரிப்பதை கவனியுங்கள். அந்த ஒவ்வொரு துண்டு செவ்வகத்திலும் பாதி சாய் சதுரத்திலும் மீதி வெளியிலும் இருக்கும். எனவே சாய்சதுரத்தின் பரப்பளவு சூழ்ந்த செவ்வகத்தின் பரப்பளிவில் பாதி என்பதைக் காணலாம்).

இப்போது செவ்வகத்தின் உயரத்தை மாற்றாமல் அகலத்தை மற்றும் மாற்றினால் புதிய சாய் சதுரம் பெறுவோம். இது முந்தையதோடு ஒப்பிடுகையில் ஒரு மூலை விட்டம் அதே அளவுடையதாய் இருக்க மற்றதன் அளவு மட்டும் மாறி வரும்.

அதாவது வெளியில் சூழ்ந்திருக்கும் செவ்வகம் பெருத்துக் கொண்டே வரட்டும் (அகல வாட்டில் மட்டும்). அப்போது நடுப்புள்ளிகள் இடம் பெயர அவற்றை இணைக்கும் சாய் சதுரங்களும் பெருத்துக் கொண்டே வரும். அவையனைத்தும் ஒரே உயரத்தில் (ஒரு மூலை விட்டம்) அமையும் அது சரி. இப்போது நான்கு பக்கங்களும் 5 செமீ உள்ளதாக எத்தனை சாய்சதுரங்களை வரைய முடியும்? இந்தப் புதிரை இன்னொரு நாள் அலசலாம்.


Comments

"நான்கு பக்கங்களும் 5 செமீ உள்ளதாக எத்தனை சாய்சதுரங்களை வரைய முடியும்?"

முடிவிலி அல்லது அனந்தம் (infinity) என்று தோன்றுகிறது.
Vanchinathan said…
உங்கள் விடை சரிதான். அத்தகைய சாய்சதுரங்களை எல்லாம் கட்டும் விதத்தை விவரிக்க முடியுமா அதுதான் வெளிவரவிருக்கும் இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தின் நோக்கமாகும்.

10 செமீ க்கு குறைந்த இடைவெளியுடன் இரு புள்ளிகளை (A, B) இடவும்.
ஒவ்வொரு புள்ளியையும் மையமாகக் கொண்டு 5 செமீ ஆரமுள்ள வட்டங்கள் வரையவும். இவ்வட்டங்கள் இரு புள்ளிகளில் (C, D) ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும்.
Aவை C, D உடன் இணைக்கவும்.
Bயை C, D உடன் இணைக்கவும்.
ACBD 5 செமீ பக்கம் கொண்ட சாய்சதுரம்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்