Skip to main content

போகிக்கான குறள் புதிர் விடை இதோ



இன்று போகி விசேஷத்திற்கான இலவச வெடி, குறளாக அமைக்க வேண்டும்   என்று வலிந்து  செய்ததால் இயல்பான புதிரின் சுருக்கம் இருக்காது.

எரித்த கரியில் எழுந்தாடும் காற்றில்
முறித்துண்பது கையில் முடி (5)


இதன் விடை:  கரும்புகை.
முதல் வரியை  "எரித்த கரியில் எழுந்து காற்றில் ஆடும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொண்டால்
"கரும்புகை" என்பது தெளிவாகும்.
இச்சொல்லையே கரும்பு + கை என்று முறித்தால் இரண்டாம் அடிக்கு விளக்கமாகும்.

கரும்புகை ஏந்தி கடித்ததன் சாறுண்டு
கரும்புள்ளைக் கூவிக் கவளங்கள் ஈந்து
கரும்புகை தோன்றிடக் கந்தலைத்தீக் கிட்டோர்க்
கரும்பும் அகத்தில்  களிப்பு


சுயமாக எழுதிய கோனார் உரை:
முதலடியின் கரும்பு  முறித்துத் தின்பது.
இரண்டாமடியின் கரும்பு (கரும்புள்) கரிய பறவையான காகம்.  விசேஷ நாட்களில்  மனிதர்கள் கூவியழைத்து காக்கைக்கு  உணவிடுவதைச் சொல்கிறது.
மூன்றாமடியில் இருக்கும் கரும்பு  (கரும்புகை) போகிக்கு எரிக்கும் போது தோன்றும்  கரிய புகை மண்டலத்தைக் குறிக்கிறது.

நான்காமடியில் இருப்பது போலியான கரும்பு:  உகரத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் தொடங்கும் சொல் சேரும்போது உண்டான காட்சிப் பிழையான கரும்பு அது.
கந்தலைத் தீக்கிட்டோர்க்கு  அரும்பும் நெஞ்சில் களிப்பு என்பதில் தீக்கிட்டோர்க்கு + அரும்பும் = தீக்கிட்டோர்க் கரும்பும் என்றானது.

ஒரு கணு கரும்பைத் தின்பதற்கே சிரமப்பட்டு பச்சை மிளகாய் அளவுக்குத் துண்டாக்க்கிச் சாப்பிடும் இக்காலத்தில் நான்கு கரும்பைத் திணித்து விட்டேன். நாற்றிசையும் இனிமை பொங்கட்டும்.


 போகிக்கே இந்தப் படையல் என்றால் நாளைய தினம் பொங்கலுக்கு  உதிரிவெடியில் இன்னும்  எவ்வளவு பெரிய கொண்டாட்டம் இருக்கும் என்று சொல்ல வேண்டுமா?

விடை கண்டுபிடித்தவர்கள் 30 பேர்:
லக்ஷ்மி ஷங்கர், ரங்கராஜன் யமுனாச்சாரி,  ரவி சுப்ரமணியன் , வீ.ஆர்.  பாலகிருஷ்ணன், ரா. ரவிஷங்கர்,  இரா.செகு,  கி மூ சுரேஷ், ராஜி ஹரிஹரன்,
வி ன் கிருஷ்ணன்,  அம்பிகா, செந்தில் சௌரிராஜன், சங்கரசுப்பிரமணியன்,
விஜயா ரவிஷங்கர், சித்தன், சாந்திநாராயணன்,  மீனாக்ஷி கணபதி, மு.க.இராகவன்,  எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பாரதி,  தேன்மொழி, ஶ்ரீதரன் ,
ஜீவமோகன், முத்துசுப்ரமண்யம், ஆர்.நாராயணன்.,  லதா, பினாத்தல் சுரேஷ்,
சுந்தர் வேதாந்தம்,  நங்கநல்லூர் சித்தானந்தம் , எஸ் பி சுரேஷ், நாதன் நா தோ, கனகசபாபதி


Comments

Raghavan MK said…

https://m.timesofindia.com/city/chennai/pongal-smog-caused-by-bhogi-bonfires-disrupts-flight-operations-at-chennai-airport/articleshow/62482569.cms

சென்னையில் கரும்புகை மண்டலம்!
💨💨💨
விமானசேவைகள் இரத்து!✈🛬🛩🛫✈

போக்குவரத்து பாதிப்பு!🚗🚚🚎🚌🛵🏍🚎🚌🚙


உதிரிவெடியின் குறள்வெடி வெடித்ததே இந்த புகைமண்டலத்துக்குக் காரணம் என நம்பதகுந்த வட்டாரங்களில் செய்தி! 🎉🎊🎆

😄😃😄
நானும் இதற்கான விடையை சரியாக அனுப்பியிருந்தேன் இரண்டாவது முறையாக அனுப்பியதில் (இரு விடையும் சேர்த்து ); ஏனோ என் பெயர் இடம் பெறவில்லை !
Vanchinathan said…
தவற விட்டுவிட்டேன் கனகசபாபதி அவர்களே. திருத்திவிடுகிறேன்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்