Skip to main content

விடை 3620

பக்தி பல விதங்களில் வெளிப்படுவதை பக்தர்கள் எழுதிய இலக்கியங்களைப் படித்தால் சட்டென விளங்கும்.  "கருணையின் கடலே,  எல்லையில்லாதவனே, எங்கும் நிறைந்திருப்பவனே" என்று பலர்  கடவுளின் குணத்தைப் பாடுகிறார்கள்.   "இப்படியெல்லாம் மோசமாயிருந்த என்னை நல்லவழிப் படுத்தியவனே" என்று கடவுள் மனிதனுக்குச் செய்ததை வேறு சிலர் பாடுகிறார்கள். இன்னமும் சிலர் சிலையழகு,  அலங்கரிக்கும் பூமாலைகள், பட்டாடைகள், ஜொலிக்கும் வைர மூக்குத்தி, சந்தனக் காப்பு என்று   விவரித்து  மனிதர்கள் கடவுளுக்கு அணிவித்த ஆடை ஆபரணங்களில்  மனதைப் பறி கொடுத்துப் பாடுகிறார்கள்.

இன்றைய புதிரில் வந்த சிவனடியார்  நிர்க்குணனே என்று பாடுபவர் போலிருக்கிறது. இப்படி அலங்கார உடை தரித்த‌ இறைவனை தரிசிப்பதில் நாட்டமின்றி ஓடிப் போய்விட்டார்.
உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)
இதன் விடை:  தரித்த = தரிசித்த ‍- சி

அப்படி ஓடிப்போன ஒருவர் எழுதிய‌ ஒரு தத்துவப் பாடல் நாட்டுப்புற இலக்கியத்தில் வந்ததா, இல்லை சித்தர்கள் எழுதியதா தெரியாது, இங்கே கொடுக்கிறேன்:
 உள்ள தெய்வம் கல்லடா
 உலாவும் தெய்வம் செம்படா
பேசும் தெய்வம் நீயடா, நானடா
எல்லாத்துக்கும் பெரிய தெய்வம் சோறுடா!


இப்பாடலை எனக்குச் சிறு வயதில் விளக்கிச் சொன்னவர்  வழியாகத்தான் கோயில்களில்
மூலவர், உற்சவமூர்த்தி  என்ற இருவேறான  வடிவ‌ங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
என் அப்பா அடிக்கடி தாலுக்கா அலுவலகம் செல்வார். ஏதாவது நில விஷயமாக அவருடைய கையெழுத்து கொண்ட சான்றிதழை ஏழை உழவருக்காக ஒரு வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் காட்ட வேண்டியிருக்கும்.  ஆனால் தாசில்தார் எங்காவது மாவட்ட ஆட்சியரைப் பார்க்கவோ, அல்லது வேறு எங்காவதோ போயிருந்தால் இது நடக்காது. அதனால் இன்னொரு தாசில்தார், எப்போதும் அதே அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும்படி நியமித்திருப்பார்களாம். அவரை  என் அப்பா மூலவர் என்றும் மற்றவரை உற்சவ மூர்த்தி என்றும் சொல்வார்!

இன்றைய விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கவும்.

Comments

Raghavan MK said…


கல்லூரி *முதல்வர்* , தமிழக முதல்வர், எனக் கேள்விபட்டிருக்கிறோம், கண்டிருக்கிறோம்!

இது யாரப்பா சிவனடியார்களின்  முதல்வர், புதிதாய் தோன்றியுள்ளாரே என குழம்பினேன்.

சைவசமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் என்றும்
சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.
இச்சிவனடியார்களில் முதல்வர் யார்? அவர் ஏன், எங்கு ஓடினார்? என்றெல்லாம் தேடி, நாடி ,ஓடி யலைந்தேன்.

நல்லநேரம் இன்று பள்ளத்தில் விழவில்லை! 😌

ஓடியலைந்த களைப்பு தீர்ந்த பின்னரே புரிந்தது, உடையணிந்த இறைவன் யார்,முதல்வர் யார், என்று !😄

உங்களுடன் பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே! 👇🏽
************************
_உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4)_

_இறைவனைக் கண்ட_
= *தரிசித்த*

_சிவனடியார்களின்  முதல்வர்_
= *சி*

_ஓடினார்_

= _*தரிசித்த* விலிருந்து *சி* ஓடினார்_

= *தரிசித்த-சி*
= *தரித்த*

= _உடையணிந்த_
************************
Muthu said…
இப்படியெல்லாம் திசை திருப்பிக் கலங்கடித்தால், சிவனடியார் என்ன நாங்களும் ஓடித்தான் போய்விடுவோம்! சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைக்கும் உத்தி அருமை!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்