Skip to main content

ராம்சுரேஷ் எழுதிய கரும்புனல்

சில நாட்களுக்கு முன் மனதைக் கலக்கும் நாவல் ஒன்றைப் படித்தேன்.  நிலக்கரி தோண்டுவதற்காக ஜார்கண்டில் (பீஹாரில்?) ஓரிடத்தில் அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்தும்போது எழும் சிக்கல்கள்  இதன் மையக்கரு. பல வருடங்களாக இது போன்ற தீவிரமான எதையும் படிக்காமல் பொழுதுபோக்குக் கதைகளே படித்திருக்கிறேன் என்று குற்ற உணர்வு தோன்றியது. அல்லது இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையா? அதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவ்வாறு நடக்கிறார்கள், எளிய மக்களின் வாழ்வு எப்படி இதில்  திண்டாடுகிறது என்பதெல்லாம் மிகவும் சங்கடப்படுத்துகிறது. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரோக்கொவிச் என்ற படம் பார்த்தால் ஒருவரை ஹீரோவாக்கும் முயற்சி தெரியும். இக்கதையில் ஆசிரியர் அது போல் செய்யாமல் எவ்வாறு எல்லோரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறார்.  இவர் விவரங்களை ஆசிரியராக அதிகம் எழுதாமல், கதைப் பாத்திரங்களின் உரையாடல்களிலேயே வருமாறு ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார். இது  அந்நூலை இன்னமும் விரிவாக எழுதாமல் விட்டாரோ என்று எண்ணவைத்தது. ஆனால் அப்படி எழுதியிருந்தால் என்ன இது வளவளவென்று எழுதியிருக்கிறாரென்று பாதியிலேயே புத்தகத்தை எடுத்து அலமாரியில் வைத்திருப்பேன். இந்த அளவு  என்னை பாதிக்கவிடாமல் ஜாக்கிரதையாய் விலகியிருந்திருப்பேன்.

  ஆசிரியர் அவர் இருப‌து ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வேலை செய்து கொண்டிருந்தபோது தான் கண்டவற்றை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்.  ராம்சுரேஷ் எழுதிய கரும்புனல் என்ற நாவல் நிச்சயம் மனதை  வருடிவிடும் இதமான புத்தகம் இல்லை.  வம்சி புக்ஸ் நிறுவனத்தார் இதை வெளியிட்டிருக்கின்றனர்.



Comments

Sundar said…
இந்த கரும்புனல் நாவலைப்பற்றி இதற்கு முன் கேள்விப்படவில்லை. இப்போதைக்கு To Read பட்டியலில் போட்டு வைத்துக்கொள்கிறேன்.

புத்தகத்தைப் பற்றிய உங்கள் குறிப்புகளைப் படித்தபோது நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சுஜாதாவின் "பதவிக்காக" என்ற நாவலின் நினைவு வந்தது. 90களில் ஏதோ ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்து, பின்னால் புத்தகமாக பிரசுரிக்கப்பட்ட நாவல் அது. போனவாரம் கலிபோர்னியாவில் எதேச்சையாக கையில் அகப்பட்டது. முன்னால் பார்த்ததில்லை என்பதால் படிக்க ஆரம்பித்தேன். 2005வாக்கில் வெளிவந்த புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதாவே சொல்லி இருப்பதுபோல், பெரிதாக கதைச்சம்பவங்களுக்காக சிரமப்படாமல், இந்திய மாநிலங்களில் பயிலப்படும் நாற்றமடிக்கும் அரசியல் தந்திரங்களைத்தான் தொடுத்து கதையாக்கியிருக்கிறார். இருபததைந்து வருடங்களுக்குமுன் அபூர்வமாக நடந்த குதிரைப் பேரங்களும், MLAக்களை resort விடுதிகளில் அடைக்கும் அவலங்களும் இப்போது மிகவும் மலிந்து விட்டதால், ஒரு வரி கூட மாற்றி எழுதத் தேவையின்றி கதை இன்றைய தமிழ்நாட்டுக்கு பொருந்துகிறது!

நம்மில் பெரும்பாலோருக்கு பரிச்சயமான சுஜாதாவின் நடை என்பதால், ராம்சுரேஷின் தாக்கம் இருக்காது என்றாலும், அதேபோல் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வாசகர்களை வருத்தப்பட வைக்கும் நாவல்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்