Skip to main content

விடை 3815

இன்று காலை வெளியான புதிர்:

சில சிவத்தலங்களில் காணப்படும் அரை வெள்ளரியில் கால்வாசி  (3)

அதற்கான விடை: பாதிரி = பாதி + (வெள்ள) ரி
 
வில்வ மரம், வன்னி மரம் போல் சில ஊர்களின் சிவாலயங்களில் தல விருட்சமாக பாதிரி மரம் இருக்கும். கடலூர்க்காரர்கள் செல்லமாக NT (new town) என்று சொல்லும் கடலூர் புதுநகரம் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் கொண்டது. சிறுவயதில் உறவினரைச் சந்திக்க அங்கே சென்று கெடிலம் ஆற்றில் குளித்திருக்கிறேன்.
இந்த சிவாலய மரத்தினைப் பற்றிய குறிப்பு கொண்ட வலைப் பக்கத்தை இன்று முதல் விடையளித்திருக்கும் ரவி சுந்தரம்  தேடிக் கொடுத்திருக்கிறார் (அவரே இன்று கிரிப்டான் புதிரையும் முதல் விடையளித்துள்ளார்). அந்த வலைப் பக்கம் இதோ

இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

Comments

நான் ஆறாம் வகுப்பு கடலூர் புனித சூசையப்பர் பள்ளியில் படித்தேன். தாத்தா பாட்டி மாமா வீட்டிலிருந்து. திரு பாதிரி புலியூர் மருவி திருப்பாப்புலியூர் ஆனது. முன்னமே தெரியும். அரை = பாதி என்ற உடன் விடை பளிச்சென்று கிடைத்தது.

வீடு திருப்பாபுலியூர் -- திருவஹிந்திபுரம் வழியில் இருந்தது. அங்கு சென்று கடிலம் ஆறு தேவராஜ பெருமாள் கோவில் அருகில் குன்றில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் போனது எல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. பாட்டி ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லி கொடுத்து தினமும் பாராயணம் செய்ய சொன்னார். பி யு சி வரை தினமும் சொல்லி வந்தேன். பிறகு மமதை கர்வம் எல்லாம் வந்து ஸ்லோகம் சொல்வதை நிறுத்திவிட்டேன். திரும்ப வயதான பிறகு மறுபடியும் தொடங்கி இருக்கிறேன். கர்வம் மமதை அழிய வேண்டும். இவை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் அதுவே அது அழிய முதல் படி. முதல் அடி விட்டேன். மேலும் முன்னேற அருள் கிடைக்க வேண்டும்.
Vanchinathan said…
சில ஊர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவலையை எழுப்பும். ஆனால் உங்களுக்கு நினைவுகளை மட்டுமின்றி வேறு வாழ்க்கைப் பாடங்களையும் சொல்லியிருக்கிறீர்கள், ரவி சுந்தரம். நன்றி.
Muthu said…
பாதிரி என்றால் இரண்டு பொருள் உண்டு. பாதிரி மரத்தை கயவருக்கு உவமையாக ஔவைப் பிராட்டி ஒரு தனிப் பாடலில் சொல்லியிருக்கிறார்:

இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்

இப்பாடலுக்கு விளக்கமும் மேலும் சுவையான செய்திகளும்
இங்கு பார்த்தேன்: https://365paa.wordpress.com/2012/03/11/249/

இந்தப் பாடலை என் பிள்ளைகளின் சிறு பிராயத்தில் சற்று மாறுபட்ட
பொருளில் சொல்லி நகையாடுவேன். தினம் செய்ய வேண்டிய வேலைகளையும்
கடமைகளையும் "செய்" என்று "சொல்லாமலே" செய்ய வேண்டும்; சொல்லிய பிறகாவது
செய்யலாம். சொல்லியும் செய்யாதிருப்பது மிக மட்டம்.

பாதிரி மரம் சிவன் கோவில் தல மரமாக இருப்பதுஎனக்குப் புதிய செய்தி.
Vanchinathan said…
ஔவையார் பாடலும் நீங்கள் சுட்டிய இடத்திலுள்ள விளக்கமும் படித்தேன். ஆனால் பலாவில் பூக்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறேன். காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிதாகியும் பல நாட்கள் கனிவதற்காக பல நாட்கள் இருப்பதால் மரத்தில் அதையே நாம் பார்த்து பூக்களைப் பார்க்க அதிகம் வாய்ப்பில்லை. இதையே பூவின்றுக் காய்ப்பது பலா என்று தவறாக எழுதிவிட்டார்கள். ஆனால் ஔவையாரின் பாடலில் பலாமரம் பூக்காது என்று ஏதும் குறிப்பில்லை. நீங்கள் சுட்டிக் காட்டும் கட்டுரையாசிரியர்தான் அப்படிச் சொல்கிறார்.
Muthu said…
<>

ஔவை பாடலில் அப்படி நேரிடையாகச் சொல்லாவிட்டலும் பலாவை சொல்லாமல் செய்யும் பெரியோருக்கு உவமையாகக் கூறுவதன் மூலம் அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கிறது!
சொல்லாமலே பெரியர் <==> பலா
சொல்லிச் செய்வர் சிறியர் <==> மா
சொல்லியும் செய்யார் கயவர் <==> பாதிரி

இந்த உவமை ஒப்புப் படி பார்த்தால்:
சொல்லாமல் செய்வது = பூக்காமல் காய்ப்பது
சொல்லிச் செய்வது = பூத்துக் காய்ப்பது
சொல்லையும் செயாதிருப்பது = பூ மட்டுமே; காய், பழம் இல்லை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்