குறுக்கெழுத்துப் புதிருக்கு நீங்கள் புதிது என்றால் விடை கண்டுபிடிப்பது எப்படி என்று புரியவில்லை என்றால் இதைப் படித்து விட்டு வாருங்கள்.
தினம் காலையில் 6 மணி வாக்கில் https://udhirivedi.blogspot.com என்ற முகவரிக்கு எட்டிப் பார்த்தால் மேலே அன்றைய புதிர் "உதிரிவெடி 3432" என்பது போன்ற தலைப்பில் வெளிவந்திருக்கும். ராத்திரி 9 மணிக்கு எட்டிப் பார்த்தால் "விடை 3432" என்ற தலைப்பில் அதற்கான விடை
அளிக்கப்படும்.
புதிரோடு ஒரு கூகிள் படிவமும் பார்க்கலாம். ஆர்வமிருப்பவர்கள் அப்படிவத்தில் தங்கள் பெயருடன் விடையை அனுப்பலாம். எனக்கு உதவும் அம்பிகா மற்றும் ராஜி ஹரிஹரன் இவர்களில் யாராவது சரியான விடையளித்தவர்கள் பட்டியலை விடைக்கான பதிவில் கருத்துரையாக வெளியிடுவார்கள்.
விடையை அனுப்பிய பின் தப்பான விடையை அனுப்பிவிட்டேனோ
சரியானதை அனுப்பலாமா என்று உங்களுக்குத் தோன்றினால் மீண்டும் அனுப்பலாம். கடைசியாக அனுப்பிய விடையே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
நிறைய பேர் புதிரை ஆர்வமாகப் போட ஆரம்பித்தால் விடையளித்தோர் பட்டியலைச் சரி பார்த்து வெளியிடும் வேலை அதிக பாரமாகி அவ்வழக்கம் நின்று போகலாம். ஆனால் இந்த 16 மாதங்களாக தினம் அது ஓடிக் கொண்டிருக்கிறது. (நினைவிருக்கட்டும்: உங்கள் பெயரில் ஏற்கனவே யாராவது விடையளித்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக
எஸ் பி சுரேஷ், கி மூ சுரேஷ், பினாத்தல் சுரேஷ், என்று மூன்று சுரேஷர்கள் இருக்கிறார்கள். நீங்களும் ஒரு சுரேஷாக இருந்தால் பொன்மொழி சுரேஷ்,
டி எஸ்பி சுரேஷ் என்பது போல் பெயரை மாற்றிக்கொள்ள்வும்!)
அது சரி புதிருக்கு எண் மூவாயிரத்துக்கு மேல் சொல்கிறீர்களே எங்கே அந்த புதிர்களெல்லாம் என்று தெரிந்து கொள்ள விழைபவர்கள் தொடர்ந்து படிக்கவும். (எச்சரிக்கை: சரித்திரப்பாடம் வருகிறது, வருஷங்கள் எல்லாம் வரும்)
இப்புதிர்களின் வரலாறு
முதலில் 1988-89ல் கையெழுத்து வடிவத்தில் 7x7 கட்டங்களில் புதிரை அமைத்து என்ணி ஐந்தே ஐந்து நகல்களை எடுத்து நான் படித்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சக மாணவர்க்கும் ஒரு பேராசிரியர்க்கும் வழங்கி வந்தேன். இது போல் ஏழெட்டுப் புதிர்கள் ஓடின.
பின்னர் 1998இல் முரசு அஞ்சல் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி சில புதிர்களைத் தட்டச்சு செய்து அழகாக கணினியில் அச்சிட்டு அதே நண்பர்களுக்கு அளித்தேன்.
பின்னர் 1998 டிசம்பரிலிருந்து இரண்டு வருடங்கள் வாரந்தோறும் ஆறாம்திணையில் (சென்னை ஆன்லைன் நிறுவனத்தின் இணைய இதழ்) , அதற்குப் பிறகு தென்றல் அச்சுப் பத்திரிகையில் மாதந்தோறும் பன்னிரண்டு வருடங்களுக்கும் (2001-2012) வலைக் கட்டங்களில் (9x9) புதிரை அமைத்து வெளியிட்டு வந்தேன்.
பிறகு நான்கு வருட இடைவெளி. சென்ற வருடம் வாட்ஸப் குழுவில் தினம் ஒற்றைக் குறிப்பை (அதனால் உதிரிவெடி என்ற பெயர்) வெளியிட்டு வந்தேன். இப்போது 2018 புத்தாண்டு தினத்திலிருந்து வலைப் பதிவில் வெளிவருகிறது. அதனால் இப்போது புதிருக்கு (உதிரியாகக் கணக்கிட்டு) வரிசை எண் 3400க்கு மேற்பட்டதாக (இந்த செப்டம்பர் 2018 இல்) இருப்பதைக் காணலாம். இவ்வலைப்பதிவில் 01/01/2018இலிருந்து வெளியான எல்லா வெடிகளையும் நீங்கள் காணலாம்.
Comments