Skip to main content

கோடையில் மழை வரும்?

கோடை தகிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால் மரங்களுக்கு சென்னையில் இப்போதுதான் கொண்டாட்டம்.  ஒதியமரம் (Indian Ash tree, Lannea coromandelica)  இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு பச்சையாகப் பூக்களைக் முடிந்துவிடாதக் கூந்தல் போல் சரிய விட்டுக் கொண்டிருக்கிறது.  




அரக்குநிறக் காய்களைக் கொண்ட copperpod என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மயில் கொன்றை தரையெங்கும் பூக்களைக் கொட்டி இறைத்துள்ளது.




கொய்யா, நெல்லி இவற்றைவிட நோஞ்சானாக இருக்கும் சரக்கொன்றை (Cassia Fistula, Indian Laburnum, Amaltas) மரம் கோடையில் மட்டும்தான்  பூப்பேன் என்று  பூத்துக் குலுங்குகிறது.










பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் எப்போதும்
பொன்னார் மேனியனே என்று சிவனைக் கொன்றை அணிந்தவன் என்ற விவரிக்கும் பாடலைப் பாடுவான்.
ஆனால் அதைவிட சுவாரசியமான தகவல்கள் சங்கப்பாடல்களில் இருக்கின்றன.    தலைவி  வெளியூர் சென்ற தலைவன் திரும்புவதற்காகக் காத்திருக்கிறாள். கார்காலத்தில் திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றவன், இன்னும் வரவில்லை. கொன்றைகளோ பூத்துக்  கார்காலம் வந்ததை அறிவித்துவிட்டன.  தன்னைத்தானே தேற்றிக் கொள்ள தலைவி  தோழியிடம் கூறியதாகப் புலவர் அழகாகக் கூறுகிறார்:

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங்  கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே


    (ஒதலாந்தையார்,  குறுந்தொகை)

"அதென்ன என் தலைவன்தான் பொய் சொல்ல மாட்டானே. அவன் வரவில்லை என்றால் இது கார்காலமாக இருக்க முடியாது. இந்தக் கொன்றை மரங்கள் சொல்வதை நான் ஏற்க மாட்டேன்" என்கிறாள்.
தலைவன், தலைவி விவகாரத்தை அப்படியே விடுவோம். இப்பாடலில்  இயற்கை பற்றிய செய்தியைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

இக்காலங்களில் கொன்றை எப்போதும் சித்திரையில்தான் பூக்கிறது. சித்திரை மழைக்காலம் கிடையாது. சங்கப்புலவர்கள் இயற்கை பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தவறில்லாமல் கவனித்து எழுதுவார்கள்.
அப்படி என்றால் ஏதோ பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
பூக்கள் பூக்கும் பருவமும் மழைப் பருவமும் இணைந்து வந்தது இப்போது மாறியுள்ளது.   க்ளோபல் வார்மிங், பருவநிலை மாற்றம் என்பதெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே  தொடங்விட்டதோ?

Comments


இந்த அழகில் மரங்களும் பூக்களும் எங்கு படமெடுக்கும் பட்டன?
Vanchinathan said…
முதலில் வரும் ஒதிய மரத்தின் படத்தை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மே மாதத்தில் எடுத்தேன். ஒற்றை மரமான சரக்கொன்றையை சென்னையில் எங்கள் கல்லூரியில் ஒரு வாரம் முன்பு எடுத்தேன். தெருவே சரக்கொன்றையாக இருப்பது, டில்லியில், இணைய இறக்குமதி.
மயில் கொன்றை (Copperpod) எல்லா படங்களும் இணையத்திலிருந்து எடுத்தவை. சென்னையில் இது ஏராளமாக இருக்கிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்