Skip to main content

அமெரிக்க தேசத்து ஆச்சரியங்கள் - 1

ரவிசுந்தரம் உதிரிவெடியில் பல நாட்களாக ஆர்வத்துடன் பங்கேற்பதுடன்
விடைகளைப் பற்றி வாட்ஸப் குழுவில் பல விதமான தொடர்பான கருத்துகளை அளித்து வருவார். தன்னுடைய நண்பர்கள், உறவினர்களை என்று பலரையும்
இப்புதிர்களைப் பற்றிக் கூறி வரவழைத்திருக்கிறார்.

மின்னஞ்சல் மூலமாகவே பழக்கமான இவர் அமெரிக்கா வரும்போது தன்னுடைய வீட்டிற்குக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறியதன்பேரில்  அவர் வசிக்கும் பிட்ஸ்பர்க் நகருக்கு  மூன்று நாட்கள் சென்றேன். அவருடன் பேசினால் பல விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.

ரவி சுந்தரம் அமெரிக்க வரலாற்றைப் பற்றிப் பேசும்போது ஜார்ஜ் வாஷிங்டன் மனைவியின் தந்திரங்கள் பற்றிச் சொல்கிறார். ஸ்பெயின் நாட்டு வரலாற்றுடன் வண்டிவாஷ் போர் (வந்தவாசிப் போர்), ஆங்கிலேயர்கள் அடையாற்றில் 18ஆம் நூற்றாண்டில் தூப்ளேயை முறியத்தது எல்லாம் எப்படித் தொடர்புடையவை என்று கூறுகிறார்.
டெஸ்லா காரை ஓட்டிக் கொண்டு என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற போது  தாமஸ் ஆல்வா எடிசன்  எப்படிக் கயமையுடன்  நிகொலாஸ் டெஸ்லாவையும் ஆல்டெர்நேடிங் கரண்ட் பற்றியும் பல அவதூறுகளைப் பரப்பினார் என்று சொன்னார்.



நயாகரா அருவியில் டெஸ்லா நிர்மாணித்த மின் ஆலையின் விவரங்களையும், இப்போது அருவியில் கொட்டும் நீரை மின்சாரத்துக்குப் பயன்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பொருட்டு  விட்டு வைத்திருப்பதையும் கூறுகிறார். (இந்த அருவியில் ஒரு  நிமிடத்தில் விழும் தண்ணீரின் அளவு சென்னை மாநகராட்சி ஒரு நாளைக்கு வழங்கும் அளவுக்கும் மேற்பட்டது!)

 பின்னர் பிட்ஸ்பர்க் நகரைக் காட்டும் போது  கார்னெகி (Andrew Carnegie) என்பவர் எப்படி வசூல் ராஜாவாக வாழ்க்கையைத் தொடங்கி நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கும் அளவுக்கு முன்னேறி அதன் மூலம் எஃகு ஆலைகளையும் வாங்கி,  உலகிலேயே பெரிய பணக்காரராகி,  கடைசி காலத்தில் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று தோன்றி சொத்தில் 90 சதவீதத்தை   நன்கொடையாக அளித்து  பல்கலைக் கழகத்தைத் தொடங்கியும் நாடெங்கிலும் நூல்நிலையங்களை அமைக்கவும்  செய்தார் என்ற  விவரங்களைக் கூறினார்.

ரவி சுந்தரம் தமிழ் எழுத்துகளை  டெக் (TeX) மென்பொருளில் உள்ளீடு செய்ய C மொழியில் 1990இல் செய்த முயற்சி பற்றியும் கூறுகிறார். அவர் அடுத்த முறை சென்னைக்கு வரும்போது எங்கள் கல்லூரியின் பொறியியல் மாணவர்களுக்குப் பயன்படுமாறு ஒருமுறை உரையாற்ற நான் வேண்டியதை ஏற்றுக் கொண்டார். அவரது மனைவி  அருணா, வங்கி வேலைக்கு நடுவில் பிட்ஸ்பர்க் கோவிலில் இயங்கும் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்து இந்தியக் குழந்தைகளுக்கான பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்திருக்கிறார்,  எங்களைப்போல் வந்துகொண்டிருக்கும் விருந்தினர்களை ஊர் சுற்றிக் காட்டுவதும் உபசரிப்பதும் இன்முகத்தோடு செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது அமெரிக்காவில் வாழ்பவர்கள் வேலைக்கு ஆட்கள் இல்லாத போதும் எவ்வளவு விதமான பொறுப்புகளைத் தாமே செய்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

சுந்தர் வேதாந்தமும் நான் ஆறு மாதங்கள் முன் வரை சந்தித்திராதவர்.
சொல்வனம் இணைய இதழில் அவருடைய  அறிவியல் கட்டுரைகள் ஒன்றிரண்டைப் படித்திருக்கிறேன்.  பென்சில்வேனியாவில் இன்டெல் நிறுவனத்தில் பணி புரியும் இவர் டிசம்பரில் சென்னை வந்த போது ஆர்வத்துடன் பல விஷயங்களைப் பேசினார். தமிழில் அறிவியல் புத்தக்ம் எழுதியதைக் கொடுத்தார்.   வெறும் பொழுதுபோக்குக்கு அல்லது பணி செய்வதற்கு  மட்டுமே புத்தகங்கள் என்றில்லாமல் சுவாரசிமாக விஷயங்களைக் கற்றுக் கொள்ள அவர் எழுதிய  சிந்தனைச் சோதனைகள்
 அருமையான புத்தகம்.

  அவரைச் சந்திக்க பென்சில்வேனியாவுக்கு அவர் வசிக்கும் ஆலன்டௌன் நகர் சென்றேன் என்றால் அது பொய்யாகிவிடும்.
பிட்ஸ்பர்கில் ரவியைச் சந்தித்து முடித்தவுடன், ரவி எங்களை அவருடைய காரில் 300கிமீ தொலைவிலுள்ள  பெயர் தெரியாத நகருக்கு  ஏதோ கடத்தல்காரர்கள் செய்த ஒப்பந்தம்போல்  எங்களை அழைத்து வந்தார். அங்கிருந்து சுந்தர் எங்களை அவருடைய காரில் அள்ளிக் கொண்டு வந்தார்.
கடத்தல்வேலையல்லவா? துப்பாக்கி விற்கும் கடையெல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.  துப்பாக்கி எப்படி அமெரிக்க வாழ்க்கையில் இடம் பெறுகிறது என்பதைப் பற்றியும் வேட்டையாடுதல்
பற்றி நாமறியாத கோணங்களையும் பற்றிக் கூறினார். வேட்டையாடுதல் மூலம் அதே விலங்கைக் காப்பது பற்றியும் விசித்திரமான உண்மையைக் கூறினார்!



அதன் பிறகு அமெரிக்க விடுதலை வரலாற்றில் முக்கிய பங்காற்றிய  இடங்களை பிலடெல்பியா நகரில் சுற்றிக் காட்டினார். ஆமிஷ் என்ற கிறிஸ்தவ மதத்தின் பிரிவினர், தொழில்வளர்ச்சியை நிராகரித்து, மின்சாரம், கார்கள் இன்றி எளிய வாழ்க்கையை வாழும் மக்களைப் பற்றி அறிய ஓரிடத்திற்கு அழைத்துக் காட்டினார்.  உலகின் மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு குடிபெயர்வதைப்
பற்றி அதிகம் படித்து வைத்து அதன் நன்மை தீமை என்ன, அதை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் கொண்டுவரும் காரணங்கள் என்ன என்று விவரமாகக் கூறுகிறார்.


தன்னுடைய மகன், மகள் இருவரும் அமெரிக்காவில் பெறும் கல்விமுறையின்  அணுகுமுறைய‌ அதிசயித்து  நம்நாட்டின் சிறந்த மாணவர்கள் பெறாததை வருத்தத்துடன் கூறுகிறார்.
இன்டெல் நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் பள்ளி மாணர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற திட்டமிருப்பதைத் தெரிவித்தார். என்னையும் உதவிக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.  அவரும் அவரது மருத்துவர் மனைவி மாயாவும் உற்சாகத்தோடு அமெரிக்காவின்  வாழ்வுமுறைகளைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிவித்தனர். கவலை இல்லாமல் கடன் வாங்கிச் செலவு செய்வது, வெயில் அதிகாமானால் மருத்துவரிடம் போவதை நிறுத்துவது, என்று பல விவரங்கள். என‌க்கு அமெரிக்கா என்றால் டமால் டுமீல் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதுதான் தெரிந்திருந்தது. பல பாட‌ங்கள் இந்த விஜயத்தில் பெற்றேன்.

Comments

Sundar said…
ஆபீஸுக்கு இரண்டு நாட்கள் தலைமுழுக்கு போட்டுவிட்டு வாஞ்சி/அம்பிகா போன்ற நண்பர்களுடன் ஊர்சுற்றி அரட்டை அடித்துக்கொண்டிருக்க வாய்ப்புக்கிடைத்தால் கசக்குமா என்ன?! It was an absolute pleasure hosting them. :-)

புத்தகம் வாங்குவதற்கான இணைப்பை அளித்ததற்கு நன்றி வாஞ்சி!

வாஞ்சி குறிப்பிட்டிருக்கும் அந்த ஆமிஷ் கலாச்சாரம் மிகவும் சுவையானது. அதைப் பற்றி யாராவது இன்னும் படிக்க விரும்பினால்: https://goo.gl/WtCFhx
Nathan NT said…
அருமையான குறிப்புகள்
Raji Bhakta said…
Cousin's AA enakku தெரிந்த விஷயங்களை vaanchi sir மூலம் மீண்டும் கேட்பதில் பெரும் மகிழ்ச்சி. Great job Ravi and Raju.
கடந்த வருடம் இதே நாளில் தம்பி சுந்தர்-மாயாவுடன் நானும், எனது மனைவியும் ஆலன்நகர் மற்றும் ஆமிஷ் கிராமம் என சுற்றிக் கொண்டிருந்தோம்.

திரு ரவிசுந்தரத்துடன் இருந்தது மிகச் சில மணி நேரங்கள் மட்டுமே என்றாலும் இனிமையான நேரங்கள் அவை. இழையோடும் நகைச்சுவையோடு ஏராள விஷயங்கள் அவரிடமிருந்து பெறலாம்.

ஆர்வமாக கேட்டால் சுந்தரிடமிருந்தும் ஏராள விஷயங்கள் வெளிவரும்.

தோழர் வாஞ்சி புதிர்வெடிகளில் தேர்ந்திருப்பது போலவே பயண அனுபவங்களை அழகாய் விவரித்துள்ளார். இன்னும் சில பகுதிகளாக தொடரும் என எதிர்பார்க்கிறேன்.
வாஞ்சி வந்ததும் எங்களுடன் தங்கியதும் எங்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி. இந்த அளவு சொல்லும் அளவு ஒன்றும் நான் செய்துவிடவில்லை.

அதிகம் பேசாமல் என்னை பேச விட்டார். இந்த வாய்ப்பை தவற விட கூடாது என்று காரில் சிறை பிடித்து அறுத்து தள்ளிவிட்டேன். அது போகட்டும், முக்கியமாக, பிட்ச்பர்க்கில் நீரிலும் நிலத்திலும் செல்லும் ஊர்தி ஒன்று இருக்கிறது https://c1.staticflickr.com/7/6073/6040143607_468e5b38d0_b.jpg அதை மிகவும் சிறப்பாக மொனாங்ககீலா நதியில் இயக்கி, கலபதி அசந்து போய் அம்பிகாவுக்கு நீர்-நில-ஊர்தி-ஓட்டுனர்-உரிமம் வழங்கிவிட்டார். அந்த சாதனைய சொல்லாமல் நான் போட்ட ரம்பத்தை சொல்லி இருக்கிறார்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்