இன்று காலை வெளியான வெடி:
ஆதி பராசக்தியுடன் அடிக்க சிவனும் கடைசியாக வந்ததால் அமைதியற்ற நிலை (5)
அதற்கான விடை: பதட்டம் = ப + தட்ட + ம்
ப = 'ஆதி' பராசக்தி
தட்ட = அடிக்க
ம் = சிவனும் கடைசியாக வந்தது
இன்று காலையில் பிரசாத் வேணுகோபால் எனக்குத் தனியாகத் தெரிவித்தது: "பதற்றம்: என்பதுதானே சரியான தமிழ்ச் சொல். இப்புதிரின் மூலம் பிழையான வடிவத்தைத் தவிர்த்து சரியான வடிவத்தை அளிக்கலாமே" என்பது அவருடைய பரிந்துரை.
"பதற்றம்" என்பது சரியான வடிவம் என்றால் அதன் பேச்சு/கொச்சை வடிவம் "பதட்டம்" என்று கொள்வதா? ஆனால் அதில் ஒரு சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பேச்சுவழக்கில் "ற்ற/ற்றி/ற்று" என்பது "த்த/த்தி/த்து" என்ற வடிவத்தில்தான் வருகிறது.
(மஹாராஷ்டிராவில் அரசு அமைக்க நேத்து நெத்தியடி வாங்கித் தோத்தவர்களின் வெத்துப் பேச்சைக் கேட்டால் இது புரியும். )
அதனால் பதட்டம் என்பது பதற்றத்திற்கு ஓர் இலக்கிய அந்தஸ்துள்ள மாற்றுவடிவம் என்று கொள்ளலாம். கொச்சை வடிவமாக இருக்க முடியாது என்பது என் வாதம். சரிதானா?
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
Comments
ஒரு சொல் தமிழிலிருந்து வடமொழி சென்றதா அல்லது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா என்றறிய, வடமொழி சொல்லை பாரசீகம், இன்னும் சில இந்தோ ஐரோப்பிய மொழிகளோடு ஒப்பிடுவர். அது போன்ற சொற்கள் அங்கேயும் இருந்தால் அது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தது. அவ்வாறான ஒத்த சொற்கள் இல்லாவிட்டால் தமிழிலிருந்து வடமொழி சென்றது என்று சொல்வார்கள்.
இவ்வகையில் பதட்டம் பதஷ்டம் சொற்கள் கட்டம், நட்டம் ஆகிய வகையில் வருகிறது.
பதற்றம் ? தெரியாது.
தமிழ்நாடு மொழிஞாயிறு தேவநேயப்பாவானரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (http://www.tamilvu.org/library/ldpam/ldpam06/ldpam061/html/ldpam061ind.htm - பக்கம் 251-252 களில்) பதறு என்ற வேர்ச் சொல்லிலிருந்து பதற்றம் வந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்பகுதியைக் copy-paste செய்ய இயலவில்லை. மலையாளம்: கதறுக;கன்னடம்: பதறு; தெலுங்கு: பதரு, பதுரு, பதுருசு என்றும் காட்டப்பட்டிருக்கிறது. http://www.tamilvu.org/library/ldpam/ldpam06/ldpam061/html/ldpam061ind.htm -இப்பக்கத்தில் பதட்டம் என்பதற்குப் பதற்றம் பார்க்கச் சொல்லியிருக்கிறது. "ட்ட" வரும் எல்லாச் சொற்களும் "ஷ்ட"விலிருந்து வந்திருக்க வேண்டியதில்லை. கஷ்டம் என்பது தமிழ் இலக்கண (தற்பவம் முறைப்படி) கட்டம் ஆகியிருக்கலாம். வேஷ்டி என்பதும் தவறு; வேட்டி தான் சரி என்று திருத்தப்பட்டிருக்கிறேன்! நண்பர் ஹரிகிருஷ்ணன் ஆழ்ந்த விளக்கம் தந்தால் நல்லது.