Skip to main content

திரிவெடி 34 விடைகள்


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

வேழம், அணி, புலி, புரவி, சாவு

 இதில் தனியானது:   புலி

நான்கு சொற்களுக்கு அதே பொருளில் எதுகையாக அமைந்த சொற்கள் உள்ளன.

வேழம் = கரி
அணி = தரி
புரவி = பரி
சாவு = மரி

 
அணி மட்டும் வினைச் சொல் என்பது சரியாகாது. சாவு,  வினைச் சொல்லாகவும் பயன்படும்.
(ஏவு, தாவு போல். "எங்கேயாவது ஆத்துல கொளத்தில விழுந்து சாவு" என்று கோபத்தில் திட்டுவதைக் கேட்டதில்லையா?)

எதுகையென்று சொன்னால் போதுமா? ஒரு செய்யுள் எழுதிப் பார்க்கலாமா?
 புலி என்பது வரி என்று கொள்ள‌ முடியாது. இருந்தாலும் வரியையும் சேர்த்துக் கொண்டு ஒரு நேரிசை வெண்பா:

பரிமே  லமர்ந்து பகைவர் பலரும்
மரிந்திட வென்றநம் மன்னன் தரித்த‌
வரிப்புலித்  தோலுடை  வண்ணமது ஈர்க்க
கரிகளும் ஆடும் களித்து.


ஜோச‌ப் அமிர்தராஜ் கூறும் இன்னொரு செய்தி: கரி, பரி, தரி, மரி  சங்கீத ஸ்வரங்களைக் குறிக்கும் எழுத்துக்களால் ஆனவை. சரி!

ராம்கி கிருஷ்ணன், முதல் நான்கு சொற்களுக்கும் தலையெழுத்துகளை "ப" என்று மாற்றினால், பழம், பணி, பலி, பரவி, என்று பொருளுடைய சொற்கள் கிடைக்கும், ஆனால் சாவை மாற்ற முடியாது என்கிறார்.  தலையெழுத்தை மாற்றினால் சாவு மாறாது என்பது சரியா என்று பிரம்மாவிடமும் எமனிடமும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.


 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

 

Comments

GUNA said…
சரியாகா தென்ற தகவலைக் கண்டேன்
சரியாகா தே,அத் தகவல் - சரியாகச்
சொல்கிறதே சாவென்னும் சொல்பெயர்ச்சொல் மட்டுமென்று
நல்ல அகராதி நூல்.
-----------------------------------------------------------------------
சாவு , பேச்சு வழக்கில் மட்டுமே வினைச்சொல்லாகப் பயன்படுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------


சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
Word : சாவு
Word
English & Tamil Meaning
பொருள்
சாவு cāvu,
n. <id. [T. tcāvu, K. Tu. sāvu, M. cāvu.]
1. Death
மரணம். (பிங்.)
2. (Astrol.) The eighth house, as the house of death;
பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.)

3. Ghost;
பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10).

Vanchinathan said…
தெரியாத சொற்கள், பரிச்சயம் அதிகமில்லாத சொற்கள், பழைய இலக்கிய நூல்களில் மட்டுமே பெரும்பாலும் இருக்கும் சொற்கள் இவற்றுக்கெல்லாம் பொருள் அறிந்து கொள்ள இந்த அகராதிகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். நீங்கள் குறிப்பிடும் அகராதி சிலவிதமான ஆராய்ச்சி நோக்கில் வடிக்கப்பட்டதால் இதுபோல் பொதுவான பரவலான விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தோன்றுகிறது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்