நேற்றைய வெடி:
வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5)
அதற்கான விடை: சிற்றுந்து = சிந்து + காற்று
சிந்து = நதி
ற்று = காற்று, தலை பிய்த்தது
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
நேற்றைய திரிவெடிக்கான விடைகளைக் கண்டு கருத்துரையில் குணா எழுதிய வெண்பாவைப் பலரும் கவனிக்காமற் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதை இங்கே நகலெடுத்து அளிக்கிறேன்:
சிந்தை மயக்கும் திரிவெடிப் போட்டிக்கு
வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய்
நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன்
சாலவும் ஒற்றுமை தான்.
குணா அவர்களே, நாலு பேர் சொன்னால் அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!
கூர்மதியால் கண்டுரைத்த குணாவுடன் நால்வரின்
சீர்மிகு சிந்தனையைச் செப்பிடுவேன் இத்தருணம்
ஊர்தெரிய இங்கே உணர்ந்து.
Comments