Skip to main content

மழை

ஒவ்வொரு வருடமும் திடீரென்று சில சமயம் முன்னறிவிப்பின்றி பெரிய மழை என்று வருவது நடப்பதுதான். ஆனால் 2003ஆம் ஆண்டில் முதன்முதலாக குளிரூட்டிய அறையில் வெளியில் நடப்பது தெரியாமல் பணி புரியும் போது மழை வந்து ஓய்ந்த பிறகே தெரிய வந்தது. அப்படிப்பட்ட தருணத்தில் குற்றாலக் குறவஞ்சியில் கவித்துவம் நிறைந்த "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்/ முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்" போன்ற வரிகள் நினைவுக்கு வந்தன. நானும் அதுபோல் எழுதிப்பார்க்கலாமா என்று முயன்றேன். நேற்று மீண்டும் அதுபோல் நெட்பிளிக்ஸ் படம் ஒன்றைப் பார்த்து முடித்தபிறகுதான் பெரிதாக மழை வந்ததை கவனித்தேன். உடனே அன்று எழுதிய விருத்தப்பாவைத் தேடியெடுத்து இப்போது இங்கே:

இலைக்குடையை விரித்துயர்ந்த பூவாகை மரத்தின்
இடுக்குவழிப் பொழிந்தமழை தெருவிலாறா யோடும்
அலையெழுந்து கடல்வீட்டின் மணல்வாசல் தெளிக்கும்
அதிலூருஞ் சங்கினங்கள் இழைத்தகோலம் அழிக்கும்
வலைவீசுஞ் செம்படவர் சென்றதோணி கவிழும்
வஞ்சிரமும் வவ்வாலும் உயிர்பிழைத்துத் துள்ளும்
குலைகனக்க வாழையதும் பேய்க்காற்றால் வீழும்
குளிர்ப்பதன அறைவாழ்வோர் அறியாத வாறே

Comments

Unknown said…
அருமை சார். தற்கால நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நவீன குறவஞ்சி! அருமை!
Sridharan said…
அருமை. அதிலும் செம்படவர் தோணி கவிழ்வதும் அதில் மீன்கள் தப்புவதும் அருமையான கற்பனை.
M k Bharathi said…
விருந்தாய் வந்த விருத்தப்பா!
அருமை!
Vanchinathan said…
மழைப் பாடலை ரசித்த அன்பர்களுக்கு நன்ரி.

இப்பாடலில் முதலில் வஞ்சிரமும் கெண்டைகளும் தப்பியதாய் எழுதியிருந்தேன். மரபுக்கவிதைக்கான கூகிள் குழுவில் வெளியிட்டபோது அதைப் படித்த ஒருவர் இது நடப்பது ஆற்றிலா, கடலிலா என்று கேட்டார். சென்ன்னைவாசியான நான் கடல்தான் என்று கூறினேன். அப்படியானல் மருத நிலத்தின் வளங்கூற வரும் ஆற்றுமீன் எப்படிப் பொருந்தும் என்றார். அதன்பின் கெண்டையை நட்டாற்றில் விட்டுவிட்டு இதைக் கொணர்ந்தேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்