Skip to main content

மழை

ஒவ்வொரு வருடமும் திடீரென்று சில சமயம் முன்னறிவிப்பின்றி பெரிய மழை என்று வருவது நடப்பதுதான். ஆனால் 2003ஆம் ஆண்டில் முதன்முதலாக குளிரூட்டிய அறையில் வெளியில் நடப்பது தெரியாமல் பணி புரியும் போது மழை வந்து ஓய்ந்த பிறகே தெரிய வந்தது. அப்படிப்பட்ட தருணத்தில் குற்றாலக் குறவஞ்சியில் கவித்துவம் நிறைந்த "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்/ முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்" போன்ற வரிகள் நினைவுக்கு வந்தன. நானும் அதுபோல் எழுதிப்பார்க்கலாமா என்று முயன்றேன். நேற்று மீண்டும் அதுபோல் நெட்பிளிக்ஸ் படம் ஒன்றைப் பார்த்து முடித்தபிறகுதான் பெரிதாக மழை வந்ததை கவனித்தேன். உடனே அன்று எழுதிய விருத்தப்பாவைத் தேடியெடுத்து இப்போது இங்கே:

இலைக்குடையை விரித்துயர்ந்த பூவாகை மரத்தின்
இடுக்குவழிப் பொழிந்தமழை தெருவிலாறா யோடும்
அலையெழுந்து கடல்வீட்டின் மணல்வாசல் தெளிக்கும்
அதிலூருஞ் சங்கினங்கள் இழைத்தகோலம் அழிக்கும்
வலைவீசுஞ் செம்படவர் சென்றதோணி கவிழும்
வஞ்சிரமும் வவ்வாலும் உயிர்பிழைத்துத் துள்ளும்
குலைகனக்க வாழையதும் பேய்க்காற்றால் வீழும்
குளிர்ப்பதன அறைவாழ்வோர் அறியாத வாறே

Comments

Unknown said…
அருமை சார். தற்கால நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
நவீன குறவஞ்சி! அருமை!
Sridharan said…
அருமை. அதிலும் செம்படவர் தோணி கவிழ்வதும் அதில் மீன்கள் தப்புவதும் அருமையான கற்பனை.
M k Bharathi said…
விருந்தாய் வந்த விருத்தப்பா!
அருமை!
Vanchinathan said…
மழைப் பாடலை ரசித்த அன்பர்களுக்கு நன்ரி.

இப்பாடலில் முதலில் வஞ்சிரமும் கெண்டைகளும் தப்பியதாய் எழுதியிருந்தேன். மரபுக்கவிதைக்கான கூகிள் குழுவில் வெளியிட்டபோது அதைப் படித்த ஒருவர் இது நடப்பது ஆற்றிலா, கடலிலா என்று கேட்டார். சென்ன்னைவாசியான நான் கடல்தான் என்று கூறினேன். அப்படியானல் மருத நிலத்தின் வளங்கூற வரும் ஆற்றுமீன் எப்படிப் பொருந்தும் என்றார். அதன்பின் கெண்டையை நட்டாற்றில் விட்டுவிட்டு இதைக் கொணர்ந்தேன்.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்