Skip to main content

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4)
என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?
 இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது?
இதோ அதற்கான  சூத்திரம்.

சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம்.

சுற்றம் : சொந்தக்காரர்கள்
 சுற்ற  : வட்டமிட
    ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து

சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம்

கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்)
மற்றொரு புறம் அச்சொல் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு 
அக்குக்கும் ஆணிக்கும் தனித்தனியாகப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. "சுற்றம்" என்பது விடை என்பது தெளிவாகிவிட்டது. நல்ல புதிரில் ஒவ்வொரு சொல்லும் புதிரின் விடைக்கு முழுதாகவோ பகுதியாகவோ தொடர்புடையதாயிருக்கும்.
 

வீட்டின் ஒரு பகுதி கட்டியவள் வெளியே இருக்க எப்படியோ வாழ் (5)

இதில்  "வீட்டின் ஒரு பகுதி" என்பதை முதல் பாகமாகவும் மிச்சமிருப்பதை இரண்டாம் பாகமாகவும் கொள்ளவேண்டும்.
ஐந்தெழுத்தில் வீட்டின்  ஒரு பகுதியைக் குறிக்கும் சொல் எது? வாசற்படி, சமையலறை, தாழ்வாரம், மொட்டைமாடி, இதில் ஏதோ ஒன்றாய் இருக்கலாம்.  அதில் எது  இரண்டாம் பாகத்துக்குத் தொடர்புடையது?

கட்டியவள் வெளியே இருக்க எப்படியோ வாழ். இதில் எது அக்கு, எது ஆணி?

கட்டியவள் :  மனைவி ? சம்சாரம் ?  தாரம்?

இதில் தாரம் என்பது முதல் பாகமான "தாழ்வாரம்" என்பதன் எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டு வந்துள்ளது.   அதைத்தவிர "ழ்வா".  அதுதான் "எப்படியோ" வாழ். ஆணியும் வந்து விட்டது.

அதனால் விடை தாழ்வாரம்.

வீட்டின் ஒரு பகுதி  = கட்டியவள் வெளியே இருக்க எப்படியோ வாழ் (5)

 எந்த இடத்தில்  உடைத்து இரு பாகங்களைக் கண்டறிவது? அதில்தான் சுவாரசியம். உள்ளது.  முதல்பாகம் எங்கே முடிகிறது, இரண்டாம் பாகம் எங்கே ஆரம்பிக்கிறது என்பதைத் தெரியாமல் பிணைப்பதுதான் புதிராசிரியரின் சாமர்த்தியம்.
வீட்டின் ஒருபகுதி கட்டியவள் என்று ஒரே மூச்சில் படிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்  அதை முதல் பாகம் என்றெண்ணி சித்தாளு, பெண் கொத்தனார் என்று வாசகர்களைத் திசைதிருப்பித் திக்குமுக்காடச் செய்வதுதான் என் வேலை.

முத்தம் பதித்துக் கொண்டிருக்கும் கணவன் மனைவி (4)

மேலோட்டமாகப் படிக்கும்போது வெள்ளைக்காரர்கள் கல்யாணத்தில் பாதிரியார் கல்யாணத்தை நடத்தி முடித்தபின் இப்போது முத்தமிடலாம் என்று சொல்லும் காட்சியைத் தோற்றுவித்ததென்றால் புதிருக்கு வெற்றி.

முத்தம் பதித்துக் கொண்டிருக்கும் = கணவன் மனைவி (4)
கணவன், மனைவி ஜோடிக்கு நான்கெழுத்தில் ஒரு சொல்லைத் தேடுவோம். "தம்பதி" . இதே சொல்  முதல் பாகத்தில் முத்தம் என்பதன் கடைசி 2 எழுத்துகளாகவும் பதித்து என்பதன் முதலிரு எழுத்துகளாகவும் இருக்கிறது. "கொண்டிருக்கிறது" என்பது விடை புதிரிலேயே சிக்கியிருக்கிறது, மறைந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இதே உத்தியில் இன்னும் இரு வெடிகள் (விடைகள் மங்கலாக்கப்படுள்ளன, எலியால் மெழுகினால் தென்படும்).

கைவசம் பாதிரியார் மறைத்துள்ள பொருளை ஈட்டு (4) 

விடை: சம்பாதி

செவ்விதழும் புன்னகையும்  மறைக்கும் அழகைக் குலைக்கும் அடையாளம் (4)

 விடை:  தழும்பு

பறக்கவைத்தவர் பறந்து போனவர் ஊர் பல்லவத் துறைமுகமா? (4)

இதை இரு பாகங்களாக உடைக்க, முதல் பாகம்:  பறக்கவைத்தவர் பறந்து  போனவர்.  இது யாரோ ஒரு நபரைக் குறிக்கிறது, அதைக் கண்டு பிடிக்க வேண்டும். அதே நபரை வேறுவிதமாய்ப் புதிரின் இரண்டாம் பாகம் விளக்கும்: ஊர் பல்லவத் துறைமுகமா? எட்டாம் வகுப்புப் பாடத்தில் வந்த நரசிம்ம வர்மன், மகேந்திர வர்மன் போன்ற பல்லவர்களை நினைத்தால் பல்லவ நகரம் நினைவுக்கு வரும்: காஞ்சியோ, மாமல்லபுரமோ? துறைமுகம் என்றால் கடலோரம் இருக்க வேண்டும், நான்கெழுத்தில் வேண்டும். சுருக்கமாக மல்லை. கேள்வியாகப் புதிரில் இருப்பதால் இதை "மல்லையா?"  என்று மாற்ற,  கிங் ஃபிஷர் விமான சேவை நடத்தி நம்மைப் பறக்க வைத்த மல்லையா நினைவுக்கு வரலாம். அவர் வங்கியில் கடன் வாங்கிய பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிப்போனதால் பறந்துபோனவர் என்றும் சொல்லலாம். அதனால் விடை: மல்லையா.

வரிசையின்றி நட்டு வைத்த ஓர் இயக்குநர் (5)
இங்கே வரிசையின்றி நட்டு என்பது "நட்டு" என்பது எழுத்துகளின் வரிசையை மாற்ற வேண்டும் என்கிறது. அதை  (உள்ளே) "வைத்த"
ஓர் என்ற சொல் "ஓ-ட்டுந-ர்", அதவாது இயக்குநர் (வண்டிகளை, திரைப்படத்தையல்ல!). எனவே இதன் விடை: "ஓட்டுநர்"
 

குயில் போன்ற ஸ்வரம் ஒன்று கூடி  உண்டாகு (4) 
குயில் போன்ற: கருத்த
ஸ்வரம் ஒன்று: ரி (கர்நாடக இசையில் குறிப்பிடப்படும்  ஏழு ஸ்வரங்களான ச,ரி,க,ம,ப,த,நி இவற்றில் ஒன்று)
இரண்டும் கூடி:  கருத்த + ரி = கருத்தரி; அப்படியென்றால் "உண்டாகு". அதனால் விடை "கருத்தரி".  புதிரிலுள்ள எல்லா வார்த்தைகளையும் அது  விளக்குகிறது.

நுழைந்தோடி எல்லைகளுக்குள் அலற  காளைகளின்  சுமை (5) 

எல்லைகள் என்றால் முதல் மற்றும் கடைசி எழுத்தகளான நு, டி.
அதற்குள் "அலற" என்றால் "கத்த". விடை: நுகத்தடி = மாடுகள்     சுமைகளை இழுக்க கழுத்தில் பூட்டப்படும் மரத்தாலான சாதனம்.

முதலாம் குலோத்துங்கன் மகனுக்குப் பிறந்தவன் பணக்காரன் (4)

 முதலாம் குலோத்துங்கன் என்றால்  முதல் எழுத்தான,  கு.
மகனுக்குப் பிறந்தவன்: பேரன்

கு+பேரன் = குபேரன் = பணக்காரன்.

இரண்டாவது பையன் கலந்துகொண்ட தீவட்டிப்  போட்டி (5)


இரண்டாவது பையன்:  'ய'
தீவட்டி: பந்தம்
விடை: பந்தயம் ( = போட்டி)
 

இன்னும் சில புதிர்களை வெறும் விடையுடன் அளிக்கிறேன்.
அந்த விடைகள் எப்படி வந்தது என்று விளக்க முயல்வது  புதிர் அவிழ்க்கும் திறனை வளர்க்க உதவும். 

கூர்மையாக்கி முதல் வருவாயை இழந்த பந்தம் (3) 
விடை: தீட்டி
கண்ணீர்விட(ப்) பயின்றவள் ஐஸ்வர்யா ராய் இல்லை (7)
விடை: அழகற்றவள் 

தீவை மண்வெட்டியால் தோண்டு, இரண்டாம் சாளுக்கியன் புதைக்கப்பட்டுள்ளான்  (4)
 விடை: கொளுத்து

இரண்டு விஷயங்களை நினைவு கொள்ளுங்கள்.  







  • நீங்கள் விடையென்று நினக்கும் சொல்லைப் புதிரில் உள்ள ஏதாவது ஒரு  சொல்லோடு தொடர்புப் படுத்த முடியவில்லை என்றால் அவ்விடை பெரும்பாலும் தவறாய் இருக்கும்!





    1. புதிரில் இருக்கும் ஒரு சொல்லுக்குப் பலஅர்த்தங்கள் இருந்தால் அதில் எதை நான் பயன்படுத்தியிருக்கிறேன் என்று  நீங்களேதான் தடவித் தடவிக் கண்டுபிடிக்க வேண்டும்.

     இப்போது நீங்கள் தயார். புதிரை ஒரு கை பார்த்துவிடுங்கள்

    Comments

    Chittanandam said…
    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன எடுத்துக்காட்டுப் புதிர்கள். நன்றி. - நங்கநல்லூர் சித்தானந்தம்
    Raghavan MK said…
    Very useful information for beginners to solve the puzzles!
    kuruvi said…
    நானும் பாராட்டு கிறேன்
    kuruvi said…
    நானும் பாராட்டு கிறேன்
    ஒரு புதிருக்கு இரண்டு விடைகள் சாத்தியமா?

    Popular posts from this blog

    விடை 3488

    இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

    திருத்திய உதிரிவெடி 4306

       உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

    உதிரிவெடி 4294

    உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்